Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை தற்போதைய நிலையில் கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் சாந்தோம் சாலை பகுதி, காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் அதிக வாகனப் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சிக் காலங்களில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் மற்றும் சமூகநலப் பிரச்சினைகள் உள்ள நிலையில், தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையை எதிர்கொண்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில் கடன் வாங்கி ரூ.1,200 கோடி செலவில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது அவசியமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய தலைமைச் செயலகம் கட்டக்கூடாது என அதிமுக கூறவில்லை என்றும், தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்னர் போக்குவரத்து நெரிசல் இல்லாத, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதைய நிலையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என த.வெ.க. அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துவதாக தனது எக்ஸ் பதிவில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P