மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் - பூவிருந்தவல்லி அருகே பொதுமக்கள் கடும் அவதி
சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்த நிலையில், பூவிருந்தவல்லி அருகே சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்பதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தி
Rai


சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்த நிலையில், பூவிருந்தவல்லி அருகே சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்பதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பூவிருந்தவல்லியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மழையின் காரணமாக பூவிருந்தவல்லி அருகே உள்ள நசரத்பேட்டை–மேப்பூர் நெடுஞ்சாலையில் மழைநீர் பெருமளவில் தேங்கி நிற்கிறது. சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தேங்கியுள்ள தண்ணீரை கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும், சாலையில் தேங்கியுள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலந்து காணப்படுவதால், அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது இதே சாலையில் மழைநீர் தேங்குவதாகவும், முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததே இதற்கு காரணம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சாலையில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றுவதுடன், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ