Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 11 செப்டம்பர் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே டிவிஎஸ் மேம்பாலம் பகுதியில் இன்று அதிகாலை சொகுசு பேருந்தும், சரக்கு லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து கோவை நோக்கி 45 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
டிவிஎஸ் மேம்பாலம் அருகே முன்னால் சென்ற சரக்கு லாரி, திடீரென சாலையோர தடுப்பில் மோதி நின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பின்னால் வந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறத்தில் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் ஓட்டுநர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ