மண்டபம் முகாமில் ஈழத்தமிழரை காலணியால் தாக்கிய அதிகாரியை கைது செய்ய வேண்டும் - சீமான்
ராமநாதபுரம், 11 செப்டம்பர் (ஹி.ச.) இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர் ஜெகநாதனை காலணியால் தாக்கியதாகக் கூறப்படும் தனித்துணை ஆட்சியர் கலைமன்னனை கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின்
சீமான்


ராமநாதபுரம், 11 செப்டம்பர் (ஹி.ச.)

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர் ஜெகநாதனை காலணியால் தாக்கியதாகக் கூறப்படும் தனித்துணை ஆட்சியர் கலைமன்னனை கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மண்டபம் முகாமில் வசிக்கும் ஜெகநாதனை தனித்துணை ஆட்சியர் கலைமன்னன் காலணியால் தாக்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டை நாடி வந்த ஈழத்தமிழர்களை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரியே அவரை காலணியால் தாக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

முகாமில் வசிப்பவர்களை காலணியால் தாக்க அதிகாரம் வழங்கியது யார் என்றும், யாருடைய உத்தரவின்பேரில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களில் இருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பும் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

ஈழத்தமிழர்களை அகதிகள் என்ற நிலையில் வைத்து, அவர்களை அடிமைகள்போல் நடத்துவது மனிதநேயத்திற்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகள் அகதிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களை மனிதநேயத்துடன் நடத்த வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் தமிழர்கள் என்பதற்காக எந்தக் கூடுதல் சலுகையும் இந்த நாடு தர வேண்டாம்; குறைந்தபட்சம் நம்மை மனிதர்கள் என்பதற்காவது மனிதநேயத்தோடு நடத்தலாமே” என சீமான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மண்டபம் முகாமில் வசிக்கும் ஜெகநாதனை காலணியால் தாக்கியதாகக் கூறப்படும் தனித்துணை ஆட்சியர் கலைமன்னனை கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இராமநாதபுரத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P