பல்லாவரம் அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணிக்கு உதவ சிவாச்சாரியார்கள் கோரிக்கை
சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை பல்லாவரத்தில் உள்ள ஸ்ரீ அபிதகுஜாலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவில் 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவத்தலமாகும். இந்த கோவிலில் திருவண்ணாமலையைப் போன்றே இங்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் இதே திருநாமங்கள் சூட்ட
பல்லாவரம் அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணிக்கு  உதவ சிவாச்சாரியார்கள் கோரிக்கை


சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை பல்லாவரத்தில் உள்ள ஸ்ரீ அபிதகுஜாலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவில் 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவத்தலமாகும். இந்த கோவிலில் திருவண்ணாமலையைப் போன்றே இங்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் இதே திருநாமங்கள் சூட்டப்பட்டுள்ளன.

இந்த ஆலயம் இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மனுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது. முன்பு மலையின் உச்சியில் இருந்த இந்த அம்மன் சிலை, குவாரி பணிகளுக்காகப் பின்னாட்களில் கீழே கொண்டு வரப்பட்டு இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இங்குள்ள பைரவர் சன்னதி மிகவும் தனித்துவமானது, இதன் இருபுறமும் இரு பிள்ளையார்கள் வீற்றிருக்கிறார்கள்.

இக்கோவில் வளாகத்தில் பைரவ சித்தர் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது.இத்தலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு அதிபதியாகக் கருதப்படும் 9 அடி உயரமுள்ள ராகு பகவான் தனது இரு மனைவிகளுடன் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார்.

இச்சிறப்புகள் பொருந்திய இந்த கோவிலில் திருப்பணி மேற்கொள்ள பக்தர்கள் தங்களால் முயன்ற பொருளுதவி செய்யுமாறு இக்கோவில் சிவாச்சாரியார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணகுஜி கூறுகையில்,

900 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ அபிதகுஜாலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவில் பைரவ சித்தர் ஜீவசமாதி அடைந்த இடம் என்பதால் கூடுதல் சிறப்பு பெற்றது. ஆரம்பத்தில் ஓலை கொட்டகையில் இருந்த இந்த கோவிலானது பின்னர் பக்தர்களின் உதவியால் இவ்வளவு பெரிய ஆலயமாக உருவெடுத்தது.

2025 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்குள்ள மண்டபம் ஒன்றில் மழை பெய்தால் நீர் கசிவு ஏற்படுகிறது. அதனை சரிசெய்ய கட்டிட வேலைகள் மேற்கொண்டால் பல கோடிகள் செலவாகும் என்பதால் தற்சமயம் ஷெட் அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்கு ரூ.25 லட்சம் வரை செலவாகும் என்பதால் பக்தர்கள் தங்களால் முடிந்த பொருள் அல்லது நிதி உதவி செய்து ஆலய தொண்டிற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b