Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
சிரித்த முகம், சிந்தையைக் கவரும் தமிழ், மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்றவர் சாலமன் பாப்பையா என்றும், அவரது மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் விற்பன்னராகத் திகழ்ந்த சாலமன் பாப்பையா, எளிய மொழியில் நகைச்சுவையுடன் பேசும் திறனையும் பெற்றிருந்ததாக மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் என்ற அளவுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தவர் என்றும், தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாக மாறியிருந்த சாலமன் பாப்பையா, தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாக வழங்கியவர் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மீதும், தன் மீதும் சாலமன் பாப்பையா மிகுந்த அன்பு கொண்டிருந்ததாகவும், திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் காட்டிய அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் மதுரையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, சாலமன் பாப்பையா தனது வீட்டு வாசலுக்கு வந்து தன்னை வரவேற்றதாகவும், சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த அவரிடம், உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வந்ததாகவும் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.
அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது என வேதனை தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், தமிழ்த்தாய் தனது அரும்புதல்வர்களில் ஒருவரை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் சாலமன் பாப்பையாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், மதுரை மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam