Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 11 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு எதிராக பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கெ.டி.ஆர். கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் பிரிவு 22ஏ நிலங்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் கெ.டி.ஆர். மற்றும் முன்னாள் மந்திரி ஹரீஷ்ராவ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதில் பேசிய கெ.டி.ஆர்., முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
மேலும்,அவர் கூறுகையில்,
சந்தன மரக் கடத்தல்காரர் வீரப்பன் வனத்துறை மந்திரியாக இருந்தால் எப்படி இருக்குமோ, அதுபோல நில மோசடியில் ஈடுபடும் ரேவந்த் ரெட்டி முதல்-மந்திரியாக இருப்பதும் உள்ளது. முதல்-மந்திரி ஆவதற்கு முன்பு ரேவந்த் ரெட்டி தகவல் அறியும் உரிமை சட்டத்தை (ஆர்.டி.ஐ.) பயன்படுத்தி மிரட்டி பணம் சம்பாதித்து வந்தார்.
ரேவந்த் ரெட்டி ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் 22ஏ நில விவகாரங்களை கையாளுகிறார்.
தெலுங்கானா அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தின் பின்னாலும் ஒரு மோசடி இருப்பதாக தெரிகிறது. ஹில்ட் பாலிசி, மூசி நதிக்கரை மேம்பாட்டு திட்டம், பியூச்சர் சிட்டி ஆகியவற்றின் பெயரில் ஐதராபாத்தை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
பார்மா சிட்டி திட்டத்தை ரத்து செய்ததும் நில மோசடிக்காகத்தான்.
கே.சி.ஆர். ஆட்சியில் பாக்ஸ்கான் நிறுவனம் வந்த கொங்கரகலான் பகுதியில் உள்ள நிலங்களின் மீதும் ரேவந்த் ரெட்டியின் பார்வை விழுந்துள்ளது. அங்கு ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தரணி இணையதளத்தில் கைரேகை இல்லாமல் ஒரு அங்குல நிலத்தைக்கூட மாற்ற முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது 'பூ பாரதி' திட்டத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. நிலங்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களே, தற்போது கபளீகரம் செய்பவர்களாக மாறிவிட்டனர். நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலக்கொள்ளை நடைபெறுகிறது.
இந்த நில விவகாரங்களால் ரேவந்த் ரெட்டி விரைவில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இன்னும் 2 ஆண்டுகளில் கே.சி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்றார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA