Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 11 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா அமைச்சரவையில் இருந்து கொந்தா சுரேகா நீக்கப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய நில முறைகேடு இருப்பதாக பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ஆர். குற்றம் சாட்டியுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் ‘22ஏ’ தடை செய்யப்பட்ட நிலங்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கே.டி.ஆர். பேசினார்.
அப்போது, முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் சகோதரர்கள் தொடர்பான நில முறைகேடுகளை கொந்தா சுரேகாவின் மகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாகவும், இதன் காரணமாகவே சுரேகா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மஞ்சேரியலில் தொடங்கிய நில விவகாரம் பெரிதானதை தொடர்ந்து, அதனை மூடி மறைப்பதற்காகவே சுரேகா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கே.டி.ஆர். குற்றம் சாட்டினார்.
1.16 கோடி ஏக்கர்
பி.ஆர்.எஸ். ஆட்சியில் 16 லட்சம் ஏக்கராக இருந்த ‘22ஏ’ தடை செய்யப்பட்ட நிலங்களின் பட்டியல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு 1 கோடியே 16 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
தெலுங்கானாவில் நடைபெறும் மிகப்பெரிய நில முறைகேட்டுக்கு இதுவே சாட்சி என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், ஒரு அமைச்சரின் மகள் அரசில் நடைபெறும் முறைகேடுகளை கேள்வி எழுப்பியதற்காக அந்த அமைச்சரையே பதவியில் இருந்து நீக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என்றும் கே.டி.ஆர். தெரிவித்தார்.
இந்த சம்பவம் காங்கிரஸ் ஆட்சியில் வெளிப்படைத்தன்மை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA