பாவூர்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதிக்கு அரிவாள் வெட்டு – பெண்ணின் தந்தை வெறிச்செயல்
தென்காசி, 11 செப்டம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆகாஷ், 23, என்பவரும், நெல்லை மாவட்டம் மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா, 21, என்பவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கொலை


தென்காசி, 11 செப்டம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே

ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆகாஷ், 23, என்பவரும், நெல்லை மாவட்டம் மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா, 21, என்பவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

திருமணத்துக்குப் பின்னர் ஆகாஷ், சுஷ்மிதா ஆகியோர் பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

ஆகாஷ் தோட்டங்களில் நெல்லிக்காய் பறிக்கும் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஆகாஷ், மனைவி சுஷ்மிதாவுடன் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது மேலஅரியநாயகிபுரத்தில் இருந்து சுஷ்மிதாவின் தந்தை முருகன் மோட்டார் சைக்கிளில் சிவகாமிபுரத்துக்கு வந்துள்ளார்.

வீட்டுக்குள் சென்ற முருகன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆகாஷின் தலை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும், தனது மகள் சுஷ்மிதாவையும் கையில் வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததைத் தொடர்ந்து, முருகன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த தம்பதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஆகாஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சுஷ்மிதாவுக்கு லேசான காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பாவூர்சத்திரம் போலீசார், தப்பியோடிய முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam