பழங்குடியின தாயும் சேயும் உயிரிழப்பு சம்பவத்திற்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் – திருமாவளவன்
சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசவத்தின்போது பழங்குடியினத்தைச் சேர்ந்த தாயும், அவரது பச்சிளம் குழந்தையும் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியை முழுமையாகக் கண்டறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத
Thiruma


Nb


சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசவத்தின்போது பழங்குடியினத்தைச் சேர்ந்த தாயும், அவரது பச்சிளம் குழந்தையும் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியை முழுமையாகக் கண்டறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பழங்குடியின மக்களை கொத்தடிமைகளாக வைத்து உழைப்பைச் சுரண்டும் கொடுமையை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தேன்மொழியும், அவரது பச்சிளம் குழந்தையும் பிரசவத்தின்போதே உயிரிழந்த பெருந்துயர சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மரம் வெட்டும் தொழிலாளியான ஆனந்தன் (40), அவரது மனைவி தேன்மொழி (35) ஆகியோர் காஞ்சிபுரம்–அரக்கோணம் சாலையில் உள்ள வெள்ளை கேட் பகுதியில் ஆறுமுகம் என்பவரிடம் மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்ததாகவும், ஆறுமுகத்திடம் முன்பணமாக ரூ.20,000 கடன் பெற்றிருந்ததால், அவர் அமைத்துக் கொடுத்த தார்ப்பாய்க் கூடாரத்தில் தங்கி வேலை செய்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 8-ம் தேதி தேன்மொழிக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கணவர் ஆனந்தன் முயன்றதாகவும், இதனை அறிந்த மரக்கிடங்கு உரிமையாளர் ஆறுமுகம், வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் அல்லது மரங்களை முழுமையாக வெட்டி முடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் எனக் கூறி, தேன்மொழியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தடுத்ததாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் தார்ப்பாய்க் கூடாரத்திலேயே தேன்மொழிக்கு பிரசவம் நடந்ததாகவும், கடுமையான பிரசவ வலி மற்றும் அதிகளவிலான ரத்தப்போக்கு காரணமாக தேன்மொழியும் அவரது பச்சிளம் குழந்தையும் அதே கூடாரத்தில் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மகேஷ் தலைமையில் கடந்த 9-ம் தேதி பொன்னேரிக்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாகவும், அதன் பின்னர் காவல்துறையினர் தலையிட்டு தேன்மொழியின் உடலை பிணக்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்ட பின்னரே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும், மர வியாபாரி ஆறுமுகத்தின் செயலுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, அவருக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பழங்குடியினர், இருளர் மற்றும் விளிம்புநிலை சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் உரிய ஆய்வு நடத்தி, அவர்கள் கொத்தடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை கொத்தடிமை முறை இல்லாத மாநிலமாக மாற்றும் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ