Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 11 செப்டம்பர் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கிய முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மாணவ, மாணவிகளின் பேட்மிண்டன் ராக்கெட்டுகள் திருடப்பட்ட சம்பவம் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 26-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டிகள் 5 பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக நேற்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான இறகுப்பந்து, வாலிபால், தடகளம், கோ-கோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. குறிப்பாக மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்க நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். பலர் தங்களது சொந்த செலவில் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை மதிப்புள்ள பேட்மிண்டன் ராக்கெட்டுகளை வாங்கி போட்டியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உள்விளையாட்டு அரங்கில் பார்வையாளர்கள் போல் வந்த மர்ம நபர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 12 பேட்மிண்டன் ராக்கெட்டுகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட ராக்கெட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.50,000-க்கும் மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட்டுகளை பறிகொடுத்த மாணவர்கள், பெற்றோரிடம் என்ன பதில் கூறுவது என்ற அச்சத்தில் கண்ணீருடன் தவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களால் தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட விளையாட்டு அலுவலர், மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொண்டு, உள்விளையாட்டு அரங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்து, ராக்கெட்டுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், உள்விளையாட்டு அரங்கில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கோப்பை போன்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் உடைமைகளுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ