Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச)
சென்னை மாநகரில் திருவொற்றியூர் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலை சம்பவங்களின் எதிரொலியாக, ரவுடிகள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை குறிவைத்து சென்னை காவல்துறை சிறப்பு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இரண்டு கொலை சம்பவங்களும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், சென்னையில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு முதல் சென்னை மாநகரில் காவல்துறையினர் சிறப்பு அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர். மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் வீடுகளுக்குச் சென்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சிறப்பு நடவடிக்கையில் இதுவரை 70-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளையும் போலீசார் தேடி கைது செய்து வருகின்றனர்.
சென்னை மாநகரில் ரவுடிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும், முன்விரோதம் காரணமாக நடைபெறும் கொலை உள்ளிட்ட குற்றங்களை தடுக்கவும் இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ