Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 12 செப்டம்பர் (ஹி.ச.)
தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினருக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று திருநெல்வேலியில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஆறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
வரவிருக்கும் முக்கிய அரசியல் களங்களை எதிர்கொள்ளும் வகையில், தென் மாவட்டங்களின் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலையிலும் பாசறை சார்பாக வலுவான குழுக்களை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் அதன் செயல்திறனை ஊக்குவிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
குறிப்பாக, கட்சியின் அடிப்படைக் கொள்கைகள், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகளை இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இளைஞர் அணியை தயார்படுத்துவது குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
Hindusthan Samachar / vidya.b