பேரிடர்களில் உயிரிழப்பில்லா நில இலக்கு - அமித் ஷா
புதுடெல்லி, 12 செப்டம்பர் (ஹி.ச.) புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (NIDM) நிர்வாகக் குழுவின் 3-வது கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார். அப்போது, இந்தியாவின் பேரிடர் மேலாண்மை அணுகுமுறையில் மிக
அமித்ஷா


புதுடெல்லி, 12 செப்டம்பர் (ஹி.ச.)

புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (NIDM) நிர்வாகக் குழுவின் 3-வது கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார்.

அப்போது, இந்தியாவின் பேரிடர் மேலாண்மை அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பேரிடர்களின்போது உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பேரிடர் ஏற்பட்ட பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்திய நிலை மாறி, தற்போது பேரிடர் அபாயத்தைக் குறைத்தல், முன்கூட்டியே எச்சரிக்கை வழங்குதல், உயிரிழப்புகளைத் தடுப்பது ஆகியவற்றை மையமாகக் கொண்ட புதிய அணுகுமுறை உருவாகியுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.

புயல், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தை முன்கூட்டியே கணித்து, பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்குவதன் மூலம் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டார். இதற்காக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

‘Zero Casualty’ எனப்படும் உயிரிழப்பில்லா பேரிடர் மேலாண்மை இலக்கை அடைய, முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை மேலும் வலுப்படுத்துதல், ஆபத்தான பகுதிகளை அடையாளம் காணுதல், உள்ளூர் நிர்வாகங்களின் தயார்நிலையை அதிகரித்தல் மற்றும் பேரிடர் நேரத்தில் விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை முக்கியமானவை என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

மேலும், கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் பேரிடர் மேலாண்மைக்காக சுமார் ₹2.5 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.

தேசிய மற்றும் மாநில அளவிலான பேரிடர் நிவாரண நிதிகளுக்கான ஒதுக்கீடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P