Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அடுத்த மாதத்திற்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இதே நடைமுறை கட்டாயமாக்கப்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான சிறந்த முயற்சியாக அரசு ஊழியர்களிடம் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை விடுத்து அரசு ஊழியர்களுக்கு மட்டும் இந்தக் கட்டுப்பாட்டை விதிப்பது நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க உதவாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் 7(3) பிரிவில் கடந்த ஜனவரி மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, அனைத்து நிலை அரசு ஊழியர்களும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி தங்களது பெயரிலும், குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் உள்ள நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள், வாகனங்கள், நகைகள், வங்கி வைப்புகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட விவரங்களை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின் தளத்தில் தனித்தனி படிவங்களில் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படியான அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிலையில், அவற்றை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய தற்போது உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சொத்து விவரங்களை தாக்கல் செய்யத் தவறும் அரசு ஊழியர்களின் செயல் விதிமீறலாகக் கருதப்படும் என்றும், அவர்களின் பதவி உயர்வை அது பாதிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் அனைவரும் சொத்துக் கணக்கை தாக்கல் செய்வது கட்டாயமாகிவிடும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்வது புதிய நடைமுறை அல்ல என்றும், கடந்த காலங்களில் பணியில் சேர்ந்த முதல் ஆண்டிலும், அதன்பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சொத்துக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஆண்டுக்கு ஒருமுறை சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சொத்து சேர்ப்பது குறையும் என்றும், இதன்மூலம் அரசு நிர்வாகம் படிப்படியாக தூய்மையடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஊழல் ஒழிப்புக்கான இந்த நடைமுறை அரசு ஊழியர்களுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ள அன்புமணி, முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் இந்தக் கட்டுப்பாட்டை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்போதுதான் தமிழக அரசு நிர்வாகத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பல பத்தாண்டுகளாக நிலவி வரும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில பத்தாண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றில் முக்கியமானது லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்தியதாகும் என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்டு வரப்பட்டுள்ள மாநிலங்களில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்றாலும், அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கொண்டுவரப்படாததுடன், அவர்கள் சொத்துக் கணக்குகளை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கும் உட்படுத்தப்படவில்லை என்றால், ஊழல் ஒழிப்பு என்பது நகைச்சுவையாகவே இருக்கும் என்றும் அன்புமணி விமர்சித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பில் அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள்தான் என்றும், அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்தால் அதிகாரிகளால் ஊழல் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான முன்முயற்சிகளை முதலமைச்சரும், அமைச்சர்களும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அன்புமணி, அதற்கான முதல் நடவடிக்கையாக முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி தங்களிடம் உள்ள அனைத்து வகையான சொத்துகளையும் பொதுவெளியில் வெளியிடுவதை கட்டாயமாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு குறிப்பிட்ட விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்திருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதையும் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொது வாழ்வில் தூய்மையை உறுதி செய்யும் வகையில் இதற்கான விதிகளை வகுத்து, முதலமைச்சர் முதல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வரை அனைவரையும் சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ