Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 12 செப்டம்பர் (ஹி.ச.)
திருமலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள சாலக்கட்ட பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொள்ளுமாறு ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அமராவதி அருகே உள்ள உண்டவல்லியில் அமைந்துள்ள முதல்-மந்திரியின் முகாம் அலுவலகத்தில் அவரை, திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜோதுல நெஹ்ரு, பனபாக லட்சுமி, ஜானகிதேவி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
அப்போது பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழை சந்திரபாபு நாயுடுவிடம் வழங்கினர்.
தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் மந்திரங்களை ஓதி சந்திரபாபு நாயுடுவுக்கு வேத ஆசீர்வாதம் வழங்கினர்.
பின்னர் சாமியின் சேஷவஸ்திரம் மற்றும் தீர்த்தப்பிரசாதங்கள் அவரிடம் வழங்கப்பட்டன.
இதையடுத்து பிரம்மோற்சவ விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேவஸ்தான நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.
விழாவையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்பதால், அவர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பக்தர்களுக்கான வரிசை நடைமுறைகள், அன்னப்பிரசாதம் வழங்குதல், லட்டு பிரசாதம் இருப்பு, பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
திருமலையில் சாலக்கட்ட பிரம்மோற்சவ விழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நவராத்திரி பிரம்மோற்சவ விழா அக்டோபர் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ விழாவில் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சிகள், சிறப்பு விழாக்கள் மற்றும் முக்கிய ஆன்மிக நிகழ்ச்சிகளின் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய சிறப்பு புத்தகத்தையும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, கருட சேவை உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA