Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 12 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திராவில் நடைபெற்று வரும் மெகா டிஎஸ்சி ஆசிரியர் பணிநியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, அரசு கூறும் 7 கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
டிஎஸ்சி தேர்வர்களின் சான்றிதழ்கள் 7 கட்டங்களாக சரிபார்க்கப்படுவதாக அரசு கூறி வரும் நிலையில், பல்வேறு முறைகேடுகள் எவ்வாறு நடைபெற்றன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் தேர்வர்களின் எதிர்காலத்துடன் அரசு அலட்சியமாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சில வெற்றியாளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாதது, போலியான கோ-கோ விளையாட்டு சான்றிதழ்கள் இருப்பதாக சம்பந்தப்பட்ட விளையாட்டு கூட்டமைப்பு அதிகாரிகளே தெரிவித்திருப்பது, ஒரு தேர்வர் குறிப்பிட்ட விளையாட்டு போட்டி நடைபெறவே இல்லை என்று நாகார்ஜுனா பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பது உள்ளிட்ட சம்பவங்களை ஜெகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வளவு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், உண்மையில் எங்கு, என்ன சரிபார்ப்பு நடத்தப்பட்டது? என்றும் அவர் அரசை நேரடியாக கேட்டுள்ளார். டிஎஸ்சி பணிநியமன நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தவறுகளுக்கு அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஜெகன் வலியுறுத்தியுள்ளார்.
டிஎஸ்சி பணிநியமனம் வெளிப்படையாகவும், நியாயமான முறையிலும் நடைபெறுவதாக அரசு கூறி வரும் நிலையில், இதுபோன்ற புகார்கள் எழுந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மெகா டிஎஸ்சி பணிநியமன நடவடிக்கை தொடங்கியதில் இருந்து ஆளும் அரசை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அதேவேளை, விதிமுறைகளின்படியே பணிநியமனங்கள் நடைபெறுவதாகவும், சான்றிதழ்கள் பல்வேறு கட்டங்களில் முறையாக சரிபார்க்கப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜெகனின் புதிய குற்றச்சாட்டால் டிஎஸ்சி பணிநியமன விவகாரம் ஆந்திர அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA