ஆண்டிபட்டியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
தேனி, 12 செப்டம்பர் (ஹி.ச.) தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியிலிருந்து குமணன்தொழு பகுதிக்கு செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது சங்கிலிக்கரடு. இந்த மலையடிவார பகுதியில் தனியாக மலைக்குன்று போல அமைந்திருக்கும் பிரம்மாண
Andipatti


தேனி, 12 செப்டம்பர் (ஹி.ச.)

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியிலிருந்து குமணன்தொழு பகுதிக்கு செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது சங்கிலிக்கரடு.

இந்த மலையடிவார பகுதியில் தனியாக மலைக்குன்று போல அமைந்திருக்கும் பிரம்மாண்டமான பாறை ஒன்றில் பெருங்கற்காலத்தில் வாழ்ந்த பழந்தமிழர்களின் 4,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியமும், குகை போன்ற பழங்கால மனிதர்களின் வாழ்விடமும் கண்டு பிடிக்கபட்டுள்ளது.

அதோடு பெருங்கற்காலம் முதல் வரலாற்று காலம் வரை இப்பகுதிகளில் பழங்கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்திருக்கின்றன.

கடமலைக்குண்டு அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் தொல்லியல் மீது கொண்ட ஆர்வத்தால் இந்த பகுதிகளில் ஆய்வு செய்தபோது இந்த சான்றுகளை கண்டறிந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடமலைக்குண்டு சங்கிலிகரடு மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் பிரம்மாண்ட பாறையின் ஒரு பகுதியில் பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வெண்மை நிற பாறை ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.

இந்த பாறை ஓவியங்களில் மனிதர்கள் தங்கள் கால்களை விரித்த நிலையில் இருப்பது போன்றும் வேட்டை காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இவை அக்கால மனிதர்கள் வேட்டையாடும் காட்சிகளாக இருக்கலாம் அல்லது அந்த காலத்தில் செய்யப்பட்ட சடங்கு முறை காட்சிகளாகவும் இருக்கலாம்.இந்த பகுதிகளில் பெருங்கற்காலம் முதல் வரலாற்று காலம் வரை பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய இரும்பு உருக்கு பொருட்கள், இரும்பை உருக்க பயன்படுத்திய சுடு மண்ணாலான குழாய்கள் மற்றும் தேய்ப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்து வருகின்றன.

குறிப்பாக, இந்த பாறை ஓவியங்கள் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களாக இருக்கக்கூடும்” என்றார்.

இதனால், இந்த பகுதிகளில் தொல்லியல்துறை முறையாக ஆய்வு நடத்தினால் கீழடியை விட பழமையான தமிழர்களின் நாகரிகம் வெளிப்படும் என்று தொல்லியல் ஆர்வலரான ஆசிரியர் செல்வம் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN