Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் 2 மற்றும் 3ஆம் மண்டல பாசன வாய்க்கால்களை தூர்வாருவதற்காக ₹14.98 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருமூர்த்தி அணையின் 2 மற்றும் 3ஆம் மண்டல பாசன வாய்க்கால்களில் 1,801.27 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களை தூர்வாருவதற்காக ₹14.98 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையில் அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இதுவரை அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படவில்லை எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விவசாயிகள் இன்று வாய்க்கால் பாசன அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் திருமூர்த்தி அணையின் பாசனத்தை நம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருக்கும் நிலையில், வறட்சி மற்றும் குறைந்த மழை போன்ற சூழலில் கடைமடை பகுதிகள் வரை பாசனத்துக்கான தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்றும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் தூர்வாரும் பணிகளை தொடங்கி முடிக்க குறைந்தது ஒரு மாத காலம் தேவைப்படும் என்பதால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தவெக அரசு ₹14.98 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, கால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ