Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.
அப்பகுதிகளில் பாசனக் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை நம்பி வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நிலவும் வறட்சியால் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, பல இடங்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.
பயிர்களை எப்படியாவது காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
ஒரு முறை தண்ணீர் வாங்குவதற்கே ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவிட வேண்டியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்யாமல் இதே நிலை நீடித்தால், தண்ணீரை விலை கொடுத்து வாங்கி விவசாயம் செய்ய முடியாமல் ஒட்டுமொத்தமாக விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவோம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam