Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்துக்கான அடிப்படை வசதிகளை தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில், திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் புதிய பெயர்ப்பலகைகள் அமைத்தல், சமையலறை மற்றும் உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கும் அறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதிகளை சரிசெய்தல், மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வாங்கித் தருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இப்பணிகளுக்காக அரசு சார்பில் எந்தவித நிதியும் ஒதுக்கப்படாமல், அனைத்து செலவுகளையும் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி கூறியுள்ளார்.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தப் பணிகளுக்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை செலவாகும் என்றும், இத்தொகையை தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது அநீதியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காலை உணவுத் திட்டத்திற்காக தமிழக அரசு பல நூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்போது, பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சில லட்சம் ரூபாயை கூடுதலாக ஒதுக்குவதில் எந்தத் தடையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அன்புமணி, அந்தச் செலவுகளை ஆசிரியர்கள் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அரசு மதுக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகளுக்கான நிதியை அரசு ஒதுக்காமல் பணியாளர்களின் தலையில் செலவுகளை சுமத்தியதால் முறைகேடுகளுக்கு வழிவகுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதே நடைமுறையை பள்ளிகளிலும் பின்பற்றினால் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், நேர்மையையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளிகளில் தவறான நடைமுறைகள் உருவாகக் கூடாது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
எனவே, காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள இதுதொடர்பான சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், திட்டத்துக்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகளுக்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P