காலை உணவுத் திட்ட ஏற்பாட்டுச் செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - டி.டி.வி தினகரன் கண்டனம்
சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரி
டிடிவி


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர்களே சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவலுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக அரசால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாட்டுச் செலவுகளை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவது ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் திட்டத்தை விரிவுபடுத்தும்போது, அதற்கான ஏற்பாட்டுச் செலவுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்காமல் தலைமை ஆசிரியர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது, அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிப்படுத்துவதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

எனவே, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு நிதியின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்றும், தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P