Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த ஆனந்த் என்ற பல் ஆனந்த் என்பவர் மூச்சுத் திணறல் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
இதையடுத்து பல் ஆனந்தின் உடலைப் பார்ப்பதற்காக அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ்குமார் (25), தினேஷ் குமார் என்ற தீனா (30) ஆகியோர் நேற்று (செப்.11) அதிகாலை சுமார் 5 மணியளவில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
அப்போது பிணவறையில் பணியாற்றும் ஊழியர் சீனிவாசனிடமிருந்து சாவியைப் பெற்றுக் கொண்டு இருவரும் பிணவறைக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதற்காக பேட்டரி வாகன ஓட்டுநரான வியாசர்பாடியை சேர்ந்த சங்கர் என்பவர் மூலம் சீனிவாசனுக்கு ரூ.200 வழங்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
பிணவறைக்குள் சென்ற சதீஷ்குமாரும், தினேஷ்குமாரும் அங்கு வைக்கப்பட்டிருந்த பல் ஆனந்தின் உடலைப் பார்த்ததோடு மட்டுமல்லாமல், மற்ற சடலங்களையும் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பிணவறைக்குள் இருவர் சென்று சடலங்களை வீடியோ பதிவு செய்வதை கவனித்த மருத்துவமனை ஊழியர்கள், இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இருப்பிட மருத்துவ அதிகாரியான வனிதா மலர், மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, சதீஷ்குமார், தினேஷ்குமார் மற்றும் பிணவறைக்குள் செல்ல உதவியதாகக் கூறப்படும் சங்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காக பிணவறைக்குள் இருந்த சடலங்களை வீடியோ எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிணவறைக்குள் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் 3 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் பிணவறையின் சாவியை வெளிநபர்களிடம் வழங்கி பணம் பெற்றுக் கொண்டு அவர்களை உள்ளே அனுமதித்ததாகக் கூறப்படும் ஊழியர் சீனிவாசன் மீதும் நடவடிக்கை எடுக்க மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN