Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியைச் சேர்ந்த சிவா (39), அமைந்தகரை கலெக்டர் காலனி ரெட்டி தெருவில் ஆவின் பால் பூத் நடத்தி வருகிறார்.
நேற்று மாலை இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர் பொருட்களை வாங்கிய பின்னர் ரூ.500 நோட்டை கொடுத்து சில்லறை கேட்டுள்ளார்.
அந்த ரூ.500 நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் சிவா அதனை பரிசோதித்ததில் கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தபடியே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு விரைந்து வந்த அமைந்தகரை போலீசார் பெண்ணை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர் அமைந்தகரை பிபி கார்டன் 2-வது தெருவைச் சேர்ந்த அலமேலு (46) என்பதும், கலெக்டர் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அலமேலுவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரூ.79 ஆயிரம் நல்ல நோட்டுகளும் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவிந்தன் தெரு - கண்ணப்பன் தெரு சந்திப்பில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பைகளை கொட்டச் சென்றபோது, அங்கிருந்து கள்ள நோட்டுகளை எடுத்ததாக அலமேலு தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இதையடுத்து அலமேலு மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் கூறுவது போல் கள்ள நோட்டுகளை குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்தாரா? அல்லது கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு கொண்டு அவற்றை மாற்ற முயன்றாரா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam