Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை சென்ட்ரல் பிரிபெய்டு ஆட்டோ நிலையம் அருகே இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசி மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக, பிரசிடென்சி கல்லூரி மாணவர் ஒருவரை பெரியமேடு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரியமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈ.வெ.ரா. சாலையில் கடந்த 8-ம் தேதி பிரசிடென்சி கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த தலா சுமார் 20 மாணவர்கள் நின்றிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கல்லூரி அடையாள அட்டையை பார்த்துவிட்டு, சாலையில் கிடந்த சிறிய கற்களை எடுத்து மாறி மாறி வீசி மோதிக்கொண்டதாக தெரிகிறது.
இந்த மோதலின்போது, எம்.எம்.டி.ஏ. பகுதியில் இருந்து ஐலண்ட் கிரவுண்ட்ஸ் நோக்கி சென்ற மாநகரப் பேருந்தின் வலதுபுற இருக்கை ஜன்னல் மீது மாணவர்கள் வீசிய கல் பட்டு, கண்ணாடி உடைந்தது. இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரியமேடு காவல் நிலைய ரோந்து வாகன உதவி ஆய்வாளர் சங்கர் விசாரணை மேற்கொண்டார்.
இதுதொடர்பாக பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவரான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் (19) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி, பின்னர் போலீசார் அவரை விடுவித்தனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்திய பெரியமேடு போலீசார், பிரசிடென்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் (20) என்ற மாணவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நித்தியானந்தனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த மோதலில் தொடர்புடைய மற்ற மாணவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ