Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை அமைக்க அரசு முன்மொழிந்துள்ளது.
நிர்வாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் இந்த உத்தேசத் திட்டத்திற்காகக் கடலோரப் பகுதிகளை ஆக்கிரமிப்பது தவறானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை தொடர்ந்து புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் இன்று நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா தலைமை தாங்க உள்ளார்.
பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் மீனவ மக்களின் குடியிருப்புகளும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மீனவ மக்களின் வாழ்விடத்தை பாதிக்காத வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமையும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b