Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய்யின் கருத்துக்கள் திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் மூத்த தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோர் குறித்து முதல்வர் விஜய் தெரிவித்த கருத்துக்களுக்கு திமுக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
முதல்வரின் பேச்சு திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், தலைவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இதற்கு முதல்வர் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b