Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதையொட்டி, சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தென் மாவட்டங்களை நோக்கி ஒரே நேரத்தில் புறப்பட்டுச் செல்வதால் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தங்கி பணிபுரியும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று இரவு முதலே கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.
ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி சென்றதால், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது. குறிப்பாக பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து, ஊர்ந்தபடி சென்றன.
இதன் காரணமாக ஜி.எஸ்.டி சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் முக்கிய சந்திப்புகள் மற்றும் சாலைகளில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஜி.எஸ்.டி சாலை மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் வழித்தடங்களில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ