Enter your Email Address to subscribe to our newsletters

வதோதரா , 12 செப்டம்பர் (ஹி.ச.)
குஜராத்தில் கடந்த ஓராண்டில் 62 சிங்கங்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நிம்மோனியா, ரத்தசோகை, செப்டிசீமியா மற்றும் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்தது உள்ளிட்ட காரணங்களால் சிங்கங்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
குஜராத் சட்டசபையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஷைலேஷ் பார்மர் எம்.எல்.ஏ. கேள்வி நேரத்தின்போது இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு வனத்துறை மந்திரி அர்ஜுன் மோத்வாடியா பதிலளித்தார்.
அப்போது, கடந்த
ஜூலை 31-ந் தேதி வரையிலான ஓராண்டில் குஜராத்தில் 62 சிங்கங்கள் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார். இதில் 17 ஆண் சிங்கங்கள், 17 பெண் சிங்கங்கள் மற்றும் 28 குட்டிகள் அடங்கும் என்றும் கூறினார்.
சிங்கங்களின் உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களில் நிம்மோனியா, ரத்தசோகை, செப்டிசீமியா மற்றும் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்தது ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதுதவிர, முடக்குவாதம், குடல்புழு பாதிப்பு, என்செபாலிட்டிஸ் மற்றும் திடீர் அதிர்ச்சி உள்ளிட்ட காரணங்களாலும் சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகளில் தெரியவந்துள்ளது.
சிங்கங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மாநில வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மந்திரி தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக சிங்கங்களுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் உண்ணி அகற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, கடந்த 2025-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி குஜராத்தில் 891 ஆசிய வகை சிங்கங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA