Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 12 செப்டம்பர் (ஹி.ச.)
கர்நாடகத்தில் உரிய உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவற்றை வருகிற நவம்பர் 1-ந் தேதிக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
துப்பாக்கியை ஒப்படைக்கும்போது மன்னிப்பு கடிதம் வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
வன ஊழியர்கள் தியாக தினத்தையொட்டி, காடுகளில் பணியாற்றியபோது உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினேன். உரிய உரிமம் இல்லாமல் யாராவது சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தால், அதை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதற்காக நவம்பர் 1-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.
துப்பாக்கியை ஒப்படைக்கும்போது மன்னிப்பு கடிதம் வழங்கலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுயபாதுகாப்புக்காக துப்பாக்கி தேவைப்படுபவர்கள் முறைப்படி விண்ணப்பித்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளால் வன ஊழியர்கள் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
அமலாக்கத்துறை சோதனை
பொதுப்பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளியின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சதீஸ் ஜார்கிகோளி எந்த தவறும் செய்யவில்லை என்றும், அவர் சட்டத்துக்கு உட்பட்டு தொழில் செய்து வருவதாகவும் கூறினார்.
வெளிநாட்டில் தொழில் செய்யக்கூடாது என்று சட்டம் உள்ளதா? இந்த விவகாரத்தில் அரசியல் உள்ளது. மேலும் 3 அல்லது 4 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறலாம். காங்கிரஸ் கட்சியை சிக்க வைக்க திட்டமிட்டு வருகின்றனர்.
ஆனால் பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதில்லை.
வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. ஆனால் இந்த விவகாரத்திலும் பா.ஜனதா அரசியல் செய்து வருகிறது.
சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர்
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரிரங்கன் அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது. இதில் வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA