Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சூர் , 12 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வரும் நிலையில், திருச்சூர் அருகே உள்ள பிரசித்திபெற்ற திருப்பிரயார் ஸ்ரீராமசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஸ்ரீராமசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட பவன் கல்யாண், கோவிலில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தீபாராதனை சேவையிலும் கலந்து கொண்டார்.
இதற்காக ஒரு நாள் தீபாராதனை சேவைக்கான நன்கொடையையும் வழங்கினார். பின்னர் கோவில் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணர் சன்னதியில் விளக்குகளை ஏற்றி வழிபட்டார்.
கோவில் சம்பிரதாயப்படி நடைபெறும் மீன்களுக்கு உணவு வழங்கும் ‘மீனூட்டு’ சேவை மற்றும் ‘வேதி வழிபாடு’ நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
பின்னர் சங்கு, சக்கரம், வில் மற்றும் ரத்தின ஆபரணங்களுடன் காட்சியளித்த ஸ்ரீராமசுவாமியை தரிசித்து, மாலை நேர அர்ச்சனையிலும் பங்கேற்றார்.
மேலும் ஸ்ரீராமசுவாமி, ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் அய்யப்பசுவாமி சன்னதிகளில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து வழிபட்டார்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மற்றும் விநாயகர் சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் செய்தார்.
பின்னர் கோவில் அர்ச்சகர்களிடம் இருந்து தீர்த்தப்பிரசாதம் மற்றும் வேத ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ள பவன் கல்யாண், திருப்பிரயார் கோவில் அருகிலேயே சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA