Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 12 செப்டம்பர் (ஹி.ச.)
சபரிமலை மண்டல மகரவிளக்கு சீசன் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள முதல்-மந்திரி வி.டி. சதீசன் உத்தரவிட்டுள்ளார்.
சீசனுக்கு முன்பாக 70 லட்சம் டின் அரவணை பிரசாதத்தை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதல்-மந்திரி வி.டி. சதீசன் தலைமையில் திருவனந்தபுரத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சபரிமலை சீசனுக்கான ஏற்பாடுகள் குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் முதல்-மந்திரி கூறியதாவது:-
சபரிமலை சன்னிதானத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
சபரிமலையில் பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
பொதுப்பணித்துறை சார்பில் சீசனுக்கு முன்பாக ரூ.551 கோடி மதிப்பில் சாலை மற்றும் கட்டுமான பணிகள் நிறைவேற்றப்படும்.
பம்பை ஆற்றில் தேங்கியுள்ள துணிகள் உள்ளிட்ட அனைத்து அசுத்தங்களும் அகற்றப்படும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 500 பஸ்கள் குத்தகைக்கு எடுத்து இயக்கப்படும்.
70 லட்சம் டின் அரவணை
சபரிமலையில் அரவணை உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி அரவணை கிடைப்பதை உறுதி செய்ய, தினசரி 3.25 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சீசனுக்கு முன்பாக 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சபரிமலையில் தீத்தடுப்பு பாதுகாப்பு மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை முறையாக பரிசோதிக்கப்படும்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
ரெயில்வே சார்பில் சீசனையொட்டி 300 ரெயில்கள் இயக்கப்படும்.
மேலும் 600 புதிய பயோ-கழிவறைகள் அமைக்கப்படும். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சபரிமலை சீசனுக்கான ஏற்பாடுகள் குறித்து அக்டோபர் மாதத்தில் மீண்டும் ஆய்வு கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு முதல்-மந்திரி வி.டி. சதீசன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA