Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 12 செப்டம்பர் (ஹி.ச)
மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல் கிராமத்தில் பழமையான அருள்மிகு கழுங்கடி முனியாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிடாய் வெட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், 38-வது ஆண்டு திருவிழாவையொட்டி 450 ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டு, 10 ஆயிரம் கிலோ அரிசி சமைத்து, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கறி விருந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கழுங்கடி முனியாண்டி கோவிலில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வழங்கும் ஆட்டு கிடாய்களை இரவு முழுவதும் வெட்டி, அதிகாலையில் சமைத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது.
38-வது ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று காலை ஆட்டு கிடாய்களுடன் பொங்கல் பானை ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து கோவில் முன்பு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டன.
பின்னர் அதிகாலை முதலே நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் பணியாளர்கள் கிடாய் கறியை சமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டுக்கான அன்னதானத்திற்காக மட்டும் சுமார் 10 ஆயிரம் கிலோ அரிசி பயன்படுத்தப்பட்டு, பிரமாண்டமான முறையில் கறி விருந்து தயாரிக்கப்பட்டது.
இன்று காலை முதல் மாலை வரை நடைபெறும் அன்னதானத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்படுகிறது.
மதுரை சுற்றுவட்டார பகுதிகளான பெருங்குடி, திருப்பரங்குன்றம், சிந்தாமணி, சாமநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தில் பங்கேற்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டதால் அப்பகுதி முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டு வருவதால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அவனியாபுரம் காவல் துணை ஆணையர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீரமைக்கவும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ