Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பாடம் எடுப்பதற்கு யாருக்கும் தகுதியும் இல்லை, தேவையும் இல்லை என அக்கட்சியின் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி 103-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியதாகவும், மறுநாள் ஜனவரி 9-ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 12-ம் தேதி குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை எதிர்த்து திருமாவளவனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் முனைவர் ரவிக்குமாரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த வழக்கில் அரசியலமைப்பு சட்ட அறிஞர் கௌதம் பாட்டியா தலைமையிலான வழக்கறிஞர் குழு EWS சட்டத்தை எதிர்த்து 70 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, திருமாவளவன் சார்பில் 34 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ததுடன், நேரிலும் வாதாடியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் 2022-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி, பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்திருத்தம் செல்லும் என 3:2 என்ற பெரும்பான்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பை சமூகநீதி கோட்பாட்டுக்கும், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுக்கும் எதிரானது என திருமாவளவன் விமர்சித்ததாகவும் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னேறிய சாதியினருக்காக மட்டுமே பாஜக அரசு செயல்படுகிறது என்பதற்கு EWS இடஒதுக்கீடு ஒரு சான்று என திருமாவளவன் அப்போது விமர்சித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என 2019-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை திருமாவளவன் சந்தித்து வலியுறுத்தியதாகவும், இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கிரிமிலேயர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என 2020-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்திலும் திருமாவளவன் தலைமையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டதாகவும், அதன்பின்னர் தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம் நடத்தியதாகவும் வன்னி அரசு குறிப்பிட்டுள்ளார்.
2021-ம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முன்வந்தது சமூகநீதி இயக்கங்களுக்கு கிடைத்த வெற்றி என திருமாவளவன் அறிவித்ததாகவும், அதே நேரத்தில் முன்னேறிய சாதியினருக்கான 10 சதவீத EWS இடஒதுக்கீட்டை விடுதலைச் சிறுத்தைகள் கடுமையாக எதிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு திருமாவளவனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 17-ம் தேதி சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமை என்ற கருப்பொருளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், SC, ST, BC, MBC மற்றும் சிறுபான்மையினரின் ஒற்றுமையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
EWS இடஒதுக்கீடு தொடர்பாக 2022-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி தமிழ்நாடு அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் திருமாவளவனும், ரவிக்குமாரும் பங்கேற்றதாகவும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என்பதால் தமிழ்நாட்டில் அதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னரே தமிழ்நாட்டில் EWS இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகவும் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
மேலும், EWS இடஒதுக்கீட்டுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் வெளிப்படுத்தி வருவதாகவும், 2025-ம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில், SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களின் வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், 2024-ம் ஆண்டு அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தும் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டதாகவும், 2026-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமாரை சந்தித்த ரவிக்குமார், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சமாக உள்ள SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வருமான உச்சவரம்பை EWS பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.8 லட்சத்துக்கு இணையாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மறுநாள் ஜூலை 21-ம் தேதி மக்களவையிலும் இதே கோரிக்கை எழுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக சமூகநீதி களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆற்றியுள்ள பணிகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே இதுவரை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
நேற்று தர்மபுரியில் நடைபெற்ற திருமண விழாவில் சுமார் ஒன்றரை மணி நேரம் திருமாவளவன் உரையாற்றியதாகவும், விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் முடிவுகள் குறித்தும், சமூகநீதி என்ற பெயரில் செயல்படும் பல்வேறு முகமூடிகள் குறித்தும் அவர் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி என அறிவிக்கப்படவிருந்த கூட்டணியின் பெயரில் சமூகநீதி என்ற வார்த்தையையும் இணைத்து மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என மாற்ற வேண்டும் என திருமாவளவன் ஆலோசனை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
சமூகநீதி என்ற வார்த்தையை அனைவரும் பயன்படுத்துகின்றனர். பாஜக கூட 10 சதவீத EWS இடஒதுக்கீட்டை சமூகநீதி என நியாயப்படுத்துகிறது. எனவே, நாம் மதச்சார்பற்ற சமூகநீதி என பெயரிட வேண்டும் என திருமாவளவன் விளக்கியதாக வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு தொடர்பாக விரிவாக விளக்கும் உரை அது இல்லை என்றும், போகிற போக்கில் EWS குறித்து குறிப்பிட்டு திருமாவளவன் பேசியதை திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் சிலர் வெட்டி ஒட்டி திரித்து வருவதாகவும் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜகவை பொறுத்தவரை முன்னேறிய சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீட்டையும் சமூகநீதி என்றே விளம்பரப்படுத்தி வருவதாகவும், இதனை குறிப்பிட்டு திருமாவளவன் பேசிய உரையை திரித்து, அவர் EWS இடஒதுக்கீட்டையே ஆதரித்துவிட்டதாக கூறுவது பாஜகவுக்கு ஆதரவான போக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கோ பாடம் எடுப்பதற்கு யாருக்கும் தகுதியும் இல்லை, தேவையும் இல்லை என அமைச்சர் வன்னி அரசு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ