Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட முதலியார்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, அகஸ்தியர்புரம், தெற்கு அகஸ்தியர்புரம், வடமலைசமுத்திரம் உள்ளிட்ட 5 கிராமங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு நிலவி வருவதாகக் கூறி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 1-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. நெல்லை மாவட்ட மகளிரணி செயலாளருமான இமாகுலட் தலைமையில் பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்தி மற்றும் பந்தங்களை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையிலேயே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே, போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவின் காரை பொதுமக்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்காக வந்த அவரை நோக்கி திரும்பிப்போ, திரும்பிப்போ என கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த இசக்கி சுப்பையா, மின்சாரத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர் மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மின்விநியோகத்தை மேம்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரிய அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam