முதியோர் உதவித்தொகை பயனாளர்களை குறைக்க எந்த திட்டமும் இல்லை - அதிகாரிகள் விளக்கம்
சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.) முதியோர் உதவித்தொகை பயனாளர்களின் எண்ணிக்கையை குறைக்க எந்தவொரு திட்டமும் இல்லை என்றும், உதவித்தொகை வரவு வைக்கப்படாத பயனாளர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் தொகை வரவு வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்
Pen


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)

முதியோர் உதவித்தொகை பயனாளர்களின் எண்ணிக்கையை குறைக்க எந்தவொரு திட்டமும் இல்லை என்றும், உதவித்தொகை வரவு வைக்கப்படாத பயனாளர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் தொகை வரவு வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர் உதவித்தொகை திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதியோர் உதவித்தொகை திட்டத்திற்காக மத்திய அரசு இந்த மாதம் புதிய தொழில்நுட்ப நடைமுறையை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் அந்த புதிய தொழில்நுட்ப நடைமுறையை முறையாக செயல்படுத்தி, தேவையான விவரங்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், புதிய தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மத்திய அரசின் நிதி வருவதில் தாமதம் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தற்போது மத்திய அரசு அதிகாரிகள் விடுமுறையில் இருப்பதாகவும், வரும் திங்கட்கிழமை முதல் தமிழகத்திற்கான தொழில்நுட்ப குளறுபடியை சரிசெய்து, நிலுவையில் உள்ள தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசு மூலம் மட்டும் பயனடையும் பயனாளர்களுக்கான உதவித்தொகை ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் வரவு வைக்கப்பட வேண்டிய பயனாளர்களுக்கு மட்டுமே தற்போது தொகை வரவு வைக்கப்படாமல் உள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மத்திய அரசின் தொழில்நுட்ப குளறுபடி சரிசெய்யப்பட்டதும், அந்த பயனாளர்களுக்கும் உதவித்தொகை வரவு வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், முதியோர் உதவித்தொகை பயனாளர்களின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆட்சி அமைந்த பின்னர், புதிதாக 65 பயனாளர்கள் முதியோர் உதவித்தொகை பெறும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ