Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 12 செப்டம்பர் (ஹி.ச.)
இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் ஆட்சி முடிவுக்கு வந்து ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறும் என்றும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசி முடிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியதைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்வர் ராஜா, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழக வெற்றிக் கழக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் கடுமையாக விமர்சித்தார்.
அப்போது, இன்னும் ஓராண்டுக்குள் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என அவர் தெரிவித்தார்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் பேசி முடித்துவிட்டதாகவும், தங்களுக்கு 59 தொகுதிகள் வழங்குவது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அமித்ஷா சென்னை வந்து பேசியதாகவும் ராஜகண்ணப்பன் கூறினார்.
59 இடங்கள் தரும்போது நமக்கு என்ன பிரச்சினை? 39 எம்.பி.க்களை வைத்திருக்கும் நாம் வாக்களித்தால்தான் மசோதா நிறைவேறும்.
எனவே, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என ராஜகண்ணப்பன் பேசியதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P