பிரபல தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா மறைவு - குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்
சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச) புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்டம்பர் 11, 2026) காலமான
பிரபல தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா மறைவு  - குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச)

புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்டம்பர் 11, 2026) காலமானார்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழ் அறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பட்டிமன்ற மேடைகள் வழியாக தமிழ் மொழியின் செழுமையையும், தமிழர்களின் வாழ்வியல் பெருமையையும் உலகெங்கும் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா என்று புகழாரம் சூட்டியுள்ள அவர், நகைச்சுவை ததும்பும் பேச்சு, ஆழமான தமிழ் புலமை மற்றும் சமூக சிந்தனைகளை எளிய மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்த பட்டிமன்றங்களை சிந்தனையைத் தூண்டும் அறிவார்ந்த மேடைகளாக மாற்றியதில் அவரது பங்களிப்பு அளப்பரியது என்று தெரிவித்துள்ள துணைத் தலைவர், தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்காக அவர் ஆற்றிய தொண்டு என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரை இழந்து வாடும் தமிழ் இலக்கிய உலகினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b