பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்
சீமான்


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என சீமான் கூறியுள்ளார்.

தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி இருப்பதாக தொடர்ந்து கூறப்படும் நிலையில், சுமார் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அதைவிட அதிக நெரிசல் உள்ள பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்தது ஏன் எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பட்டினப்பாக்கத்தில் ஏற்கனவே குறுகிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருவதால், புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்பட்டால் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வருகையின்போது பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் கடல் மட்ட உயர்வு, சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் அபாயம் உள்ள பகுதியில் அடுத்த 100 ஆண்டுகளுக்கான தலைமைச்செயலகத்தை அமைப்பது எவ்வாறு தொலைநோக்குப் பார்வையாக இருக்கும் என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட நலனுக்காக மக்களின் வரிப்பணத்தை வீணடித்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள சீமான், இல்லையெனில் 9 மீனவ கிராம மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam