Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் மின்சாரம் இருந்தபோதிலும் நிலவும் மின்னழுத்தப் பிரச்சினையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் வீதிக்கு வந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின்,
நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மின்சாரப் பிரச்சினையின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதுடன், மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டாலும் பல இடங்களில் மின்னழுத்தப் பிரச்சினை ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் இப்பிரச்சினையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மின்சாரத் துறை அமைச்சர், அதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தாமல் தேவையில்லாத அவதூறுகளை பேசி வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மேலும், மின்சாரம் மட்டுமின்றி ஆவின் பால் விநியோகம் உள்ளிட்ட மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் த.வெ.க. அரசு திணறி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல், பிரச்சினைகளை திசைதிருப்பும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதாக விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இதுபோன்ற திசைதிருப்பும் வேலைகளை அரசு உடனடியாக நிறுத்திவிட்டு, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் அன்றாட தேவைகளான தடையற்ற மின்சாரம் மற்றும் சீரான மின்விநியோகம் உள்ளிட்டவற்றை உறுதி செய்வதே அரசின் முக்கியப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P