Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அதிகளவில் பயணம் செய்வதை பயன்படுத்தி, தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கும் நிலை தொடர்ந்து காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கும், கூடுதல் பொருளாதார சுமைக்கும் ஆளாகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதை தடுக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.
அனைத்து தனியார் பேருந்துகளிலும் அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை பயணிகளுக்கு தெளிவாக தெரியும்படி வெளியிடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பண்டிகை காலங்களில் பொதுமக்களின் பயணத் தேவையை கருத்தில் கொண்டு போதிய எண்ணிக்கையில் அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் அதிகளவில் பயணிகள் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு கண்காணிப்பு மற்றும் புகார் மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
இணையவழி முன்பதிவு செய்யும்போதும் கட்டணக் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், அனைத்து நாட்களிலும் தனியார் பேருந்துகளின் கட்டண முறையை முறைப்படுத்தி, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நிரந்தரமான கண்காணிப்பு முறையை ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
பண்டிகை என்பது அனைத்து மக்களும் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய காலம்.
பணம் உள்ளவர்கள் மட்டுமே சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கக் கூடாது.
பொதுமக்களின் அவசரத் தேவையை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிப்பதை அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத் துறை உடனடியாக தலையிட்டு, பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் நடைபெறும் அதிகப்படியான கட்டண வசூலை தடுத்து, கட்டண வசூலை முறைப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசும், துறை சார்ந்த அமைச்சரும் மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ