Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ் பட்டிமன்ற வரலாற்றில் தனக்கென தனிமுத்திரை பதித்த மூத்த தமிழறிஞரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா, தனது 91-வது வயதில் நேற்று காலமானார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராமத்தில் 1936-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டமேற்படிப்பு பயின்றார். பின்னர் அதே கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியதுடன், பட்டிமன்ற நடுவராகவும் சிறந்து விளங்கினார்.
நகைச்சுவையுடனும், சிந்தனைத் தெளிவுடனும் அவர் பேசிய பட்டிமன்றங்கள் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராகப் பங்கேற்றுள்ள சாலமன் பாப்பையா, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி சிவகாசியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்பு பட்டிமன்றத்தில் கடைசியாக பங்கேற்றார்.
தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி தமிழக அரசு 2000-ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், மத்திய அரசு 2021-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்தன. மேலும், முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக உடல்நலக் குறைவால் ஓய்வில் இருந்த சாலமன் பாப்பையாவுக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல் மதுரை ஆரப்பாளையம், ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி 4-வது தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தனது உயிலில் குறிப்பிட்டிருந்த விருப்பத்தின்படி, சாலமன் பாப்பையாவின் உடல் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணிக்குள் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
சாலமன் பாப்பையாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மனைவி கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழுக்கும், பட்டிமன்ற உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ள சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam