எஸ்சி, எஸ்டி மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.) கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீத
உயர்நீதிமன்றம்


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இதில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பட்டியலின மற்றும் பழங்குடியின குழந்தைகளின் பெற்றோருக்கு இதுபோன்ற வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதைப் போல, சமூக ரீதியாக பின்தங்கிய பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கும் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

மேலும், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், அதேபோன்று தமிழகத்திலும் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கக் கோரி 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளிக் கல்வித்துறைக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், கல்வி உரிமைச் சட்டத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என எந்த விதிமுறையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், வருமான உச்சவரம்பு நிர்ணயிப்பது தொடர்பான விவகாரம் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கல்வி உரிமைச் சட்டத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படாத நிலையில், அவ்வாறு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P