மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - த.வெ.க தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்
சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் நிர்வாகிகள் அடங்கிய குழுவை கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். வரும் அக்
Tvk


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் நிர்வாகிகள் அடங்கிய குழுவை கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, இரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் பணிப் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். இணைப் பொறுப்பாளர்களாக பி. ராஜ்குமார், கே. தென்னரசு, ஆர். வினோத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைப் பொறுப்பாளர்களாக சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் பி. சரவணமூர்த்தி, செங்கல்பட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். தியாகராஜன், திருப்போரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி. விஜயராஜ், பல்லாவரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜே. காமராட்சி மற்றும் எம்.எஸ். பாலாஜி என்கிற மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் பணிப் பொறுப்பாளராக டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இணைப் பொறுப்பாளர்களாக எம். விஜய் பாலாஜி, சி. விஜயலட்சுமி மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணைப் பொறுப்பாளர்களாக எஸ். பாலமுருகன், வி. சத்தியபாமா, கே. ராம்குமார், சி.எஸ். திலீப் மற்றும் எம். சத்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இரு தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும், அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN