மிஸ் இங்கிலாந்து விவகாரம் என்ன ஆனது? - பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கே.டி.ஆர். கேள்வி
ஐதராபாத் , 12 செப்டம்பர் (ஹி.ச.) தெலுங்கானா சட்டசபை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் மீது பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அந்த கட்சிய
A


ஐதராபாத் , 12 செப்டம்பர் (ஹி.ச.)

தெலுங்கானா சட்டசபை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் மீது பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு அந்த கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர். கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்த வழக்குகளை நாங்கள் நீதிமன்றங்களில் எதிர்கொள்வோம். ஆனால் ஐதராபாத்தில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு போட்டியின்போது மிஸ் இங்கிலாந்து மில்லா மேகி தெரிவித்த பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகள் என்ன ஆனது?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மில்லா மேகி குற்றம்சாட்டிய நபர்களை தெலுங்கானா போலீசார் இன்னும் பாதுகாத்து வருகிறார்களா? இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் பதில் உள்ளதா? என்றும் கே.டி.ஆர். கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்-மந்திரி தனது கட்டுப்பாட்டில் உள்ள போலீசாரை பயன்படுத்தி பி.ஆர்.எஸ். தலைவர்கள் மீது பாலியல் தொந்தரவு வழக்குகளை பதிவு செய்திருப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தும் செயல் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கடந்த 2025-ம் ஆண்டு ஐதராபாத்தில் மிஸ் வேர்ல்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போது மிஸ் இங்கிலாந்து மில்லா மேகி, போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஐதராபாத்தில் இருந்தபோது பணக்கார ஆண் ஸ்பான்சர்களை மகிழ்விக்க வேண்டும் என்று தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த மில்லா மேகி, மிஸ் வேர்ல்டு போட்டியில் இருந்து பாதியிலேயே விலகி இங்கிலாந்து திரும்பினார். பின்னர் அவர் தெரிவித்த கருத்துகள் தெலுங்கானாவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, அவரது குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த தெலுங்கானா அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், பி.ஆர்.எஸ். தலைவர்கள் மீது தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கே.டி.ஆர்., மிஸ் இங்கிலாந்து விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று தெலுங்கானா டி.ஜி.பி.யிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA