Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 12 செப்டம்பர் (ஹி.ச.)
வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிலுவையில் இருந்த ஓவர்சீஸ் கல்வி உதவித்தொகை நிதியை தெலுங்கானா அரசு விடுவித்துள்ளது.
இதற்காக ரூ.179.9 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 3,008 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
துணை முதல்-மந்திரியும், நிதித்துறை மந்திரியுமான மல்லு பாட்டி விக்ரமார்க்கின் உத்தரவின்பேரில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட நிதியில், முதல்-மந்திரியின் ஓவர்சீஸ் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 1,063 சிறுபான்மை மாணவர்களுக்கு ரூ.76.1 கோடி வழங்கப்படுகிறது.
டாக்டர் அம்பேத்கர் ஓவர்சீஸ் கல்வி நிதி திட்டத்தின் கீழ் 1,193 எஸ்.சி. மாணவர்களுக்கு ரூ.48.4 கோடியும், 573 எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.36.9 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாத்மா ஜோதிபா பூலே ஓவர்சீஸ் கல்வி நிதி திட்டத்தின் கீழ் 179 பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு ரூ.18.4 கோடி வழங்கப்படுகிறது.
ஏற்கனவே கல்வி உதவித்தொகை செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் பணம் செலுத்தும் பணி நிறைவடைந்துள்ளதாக நிதித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் குமார் சுல்தானியா தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த திறமையான மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தங்களது உயர்கல்வியை தடையின்றி தொடர இந்த நிதி உதவும் என்று தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA