Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'தி பாரடைஸ்' திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
எவ்வித தாமதமுமின்றி குறித்த தேதியில் படம் திரைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்த படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.
அப்போது, தயாரிப்பாளர் சுதாகர் செறுகுரி பேசும் போது:
'தி பாரடைஸ்' படம் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 24-ஆம் தேதியன்று வெளியாகிறது. படத்தின் இறுதி வடிவம் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா பேசும் போது,
சிறிய தாமதம் ஏற்பட்டிருந்தாலும், படத்தின் கிளிம்ப்ஸ், டீசர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இது ஒரு புரட்சிகரமான தாய் - மகன் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட படம். அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலையும் பேசுகிறது. 'பிறப்பும் இறப்பும் நமக்கானது,
ஆனால் வாழ்வு நாட்டுக்கானது' என்ற கலோஜியின் வரிகளுக்கு ஏற்ப, தங்கள் உரிமைக்காகப் போராடும் மனிதர்களின் கதையே இது. படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள். ரசிகர்கள் இந்த உணர்வுப்பூர்வமான அனுபவத்தை நேரடியாகத் திரையரங்கில் பெற வேண்டும் என்பதற்காக டிரெய்லர் எதுவுமின்றி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம், என்றார்.
நடிகர் நானி பேசும் போது:
இரண்டு முறை வெளியீட்டு தேதி மாறியதால் சிறு தயக்கம் இருந்தது உண்மைதான். ஆனால், ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்கள் பொறுப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இப்படம் தன் பாதையைத் தானே அமைத்துக் கொண்டது போன்ற உணர்வைத் தருகிறது. ஸ்ரீகாந்தின் பிரம்மாண்ட பார்வையைத் திரையில் கொண்டு வந்துள்ளோம்.
கால அவகாசம் குறைவாக இருப்பதால் டிரெய்லர் வெளியிடவில்லை. இது என் திரையுலக வாழ்க்கையிலேயே மிகவும் கடினமான, சவாலான படமாக அமைந்தது.
சண்டைக் காட்சிகளின் போது எனக்கும் சக நடிகர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன; எங்கள் உழைப்பையும் ரத்தத்தையும் திரையில் காண்பீர்கள்.
டீசரைப் பார்த்துவிட்டு இது வெறும் வன்முறைப் படம் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், 'தி பாரடைஸ்' ஒரு அழகான தாய்-மகன் கதையையும், அதற்குப் பின்னணியில் இருக்கும் அழுத்தமான உணர்வுகளையும் மையமாகக் கொண்டது.
பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தை இப்படம் நிச்சயமாக வழங்கும், என்றார்.
அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் மோகன் பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனைத்துப் பணிகளையும் முடித்து, செப்டம்பர் 24-இல் தியேட்டர்களில் அதிரடி ஆக்ஷன் விருந்து படைக்க படக்குழுவினர் தயாராக உள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J