Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 12 செப்டம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவு வரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சீமைக்கருவேல மரங்களை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாரத்திற்கு 3 நாட்கள் வரை 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் கைக்குழந்தைகள், சிறுவர்-சிறுமியர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் நச்சுப்பூச்சிகள் உள்ளிட்டவற்றால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க மின்துறை அதிகாரிகள் முன்வருவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்தும் காவல்துறையினரும், அதிகாரிகளும் உடனடியாக வந்து நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மின்துறை அதிகாரிகளிடம் பேசி மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த போராட்டத்தால் திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
போராட்டத்தின்போது இருசக்கர வாகனங்கள் கூட செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், அவ்வழியாக வந்த 2 ஆம்புலன்ஸ்களுக்கு பொதுமக்கள் உடனடியாக வழிவிட்டனர்.
போராட்டத்திற்கு மத்தியிலும் அவசர மருத்துவ உதவிக்குச் சென்ற ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த புல்லரம்பாக்கம் பொதுமக்களின் மனிதநேய செயல், அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
Hindusthan Samachar / GOKILA arumugam