Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு,
திமுக ஆட்சியில் மின்சார விநியோகம் சிறப்பாக இருந்ததாகவும், அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இல்லாமல் கட்டுப்பாடற்ற மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு மின்வெட்டு, மின்தடை ஏற்பட்டு வருவதாகவும், இதற்குப் பின்னால் மிகப்பெரிய விஷயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் செயற்கையாக மின் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதனை காரணமாகக் காட்டி மின்வாரியத்தை அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் முயற்சி நடைபெறுவதாகவும் அப்பாவு குற்றம்சாட்டினார்.
அதானி நிறுவனம் மின் கட்டணத்தை 25 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தித் தருமாறு கேட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக பல்லாயிரம் கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இந்தத் தகவல் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சேலத்தில் குடிநீர் விநியோகமும் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அப்பாவு, தூய்மைப் பணிகளும் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
தூய்மைப் பணியாளர்களிடம் வாக்குகளைப் பெற்றுவிட்டு, அவர்களை போராட்டத்திற்கு தள்ளிவிட்டதாகவும், அவர்களை அழைத்து தமிழக முதலமைச்சர் விஜய் பேசுவதற்குக்கூட சம்மதிக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
தமிழக முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றதாக கூறப்பட்டாலும், அவரது வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக அரசு சார்பில் தெளிவான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் அப்பாவு தெரிவித்தார்.
அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்லும்போது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து செல்வது வழக்கம் எனக் கூறிய அவர், லண்டனில் நடிகை திரிஷா டீ சாப்பிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்படுவதாகவும் விமர்சித்தார்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடர்பாக பேசிய அப்பாவு, சபாநாயகர் பிரபாகர் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். சட்டப்பேரவை வரலாற்றில் அவரைப் போல ஆணவப்போக்குடன் செயல்பட்ட சபாநாயகர் யாரும் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு முதலமைச்சர் கூறியபோதும், சபாநாயகர் துண்டுச்சீட்டைப் பார்த்துவிட்டு அவரை பேச அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவது சட்டப்பேரவை மரபு என்றும், கடந்த திமுக ஆட்சியில் ஆளும் கட்சியைவிட எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் அப்பாவு கூறினார். சட்டப்பேரவை நடவடிக்கைகளை முதன்முறையாக நேரலையில் ஒளிபரப்பியது திமுகதான் என்றும், 2021-ல் திமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக நான்கு குழுக்கள் நாடு முழுவதும் அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், கேள்வி நேரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாகவும் அப்பாவு விளக்கினார்.
தற்போது சட்டப்பேரவையில் பேசக்கூடாத தகவல்களைக்கூட பேசுவதற்கு சபாநாயகர் அனுமதிப்பதாகவும், சட்டப்பேரவையை ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றும் வகையில் செயல்படுவது மிகவும் மோசமான செயல் என்றும் அவர் விமர்சித்தார்.
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் மிசா குறித்து பேசியதன் மூலம், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பலர் மிசா குறித்து தேடிப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வரலாற்றில் இருந்த பல தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளதாகவும் அப்பாவு தெரிவித்தார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் அமைப்பது பொருத்தமற்றது என தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியைத் தவிர பெரும்பாலான கட்சிகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனை விமர்சித்த அப்பாவு, “நடிகை திரிஷா வீட்டில் இருந்து பார்த்தால் சட்டமன்றம் தெரிய வேண்டும் என்று சொல்லிவிட்டாரோ என்னவோ; அதனால் பட்டினப்பாக்கத்தில் சட்டமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.
மேலும், தமிழகத்தில் ஊழலும் லஞ்சமும் நிறுத்தப்படவில்லை என்றும், பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் சேவைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அப்பாவு குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க சபாநாயகர் போதிய நேரம் வழங்க மறுப்பதாகவும், எதிர்க்கட்சிகளை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் சபாநாயகருக்கு சிக்னல் கொடுத்து அறிவுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால், சபாநாயகர் சுயமாக இயங்க முடியாத நிலை இந்த ஆட்சியில் இருப்பதாக விமர்சித்த அப்பாவு, தான் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டப்பேரவை நிர்வாகத்தில் முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் ஒரு முறை கூட தலையிட்டதில்லை என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P