Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 12 செப்டம்பர் (ஹி.ச)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்டோ துறையின் எதிர்காலம் குறித்த பரபரப்பான விவாதத்தை கிளப்பியுள்ளார்.
சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அமெரிக்க மண்ணில் தொழிற்சாலைகளை அமைத்து கார்களை உற்பத்தி செய்வதை தான் வரவேற்பதாக அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு கார் உற்பத்தியாளர்கள் மத்தியில் சீன நிறுவனங்களுக்கு எதிராக நிலவி வரும் கடும் எதிர்ப்புக்கு மாறாக அதிபரின் இந்த நிலைப்பாடு அமைந்துள்ளது.
பிரபல ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் 'தி இங்க்ராஹாம் ஆங்கிள்' நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்தார்.
சீனா இங்கு வந்து தங்கள் கார்களை தயாரிப்பதற்காக ஒரு தொழிற்சாலையை திறக்க விரும்பினால், அதற்கு நான் சம்மதிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த அனுமதிக்கு அவர் ஒரு முக்கிய நிபந்தனையையும் விதித்துள்ளார்.
சீன நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே அது. ஏற்கனவே ஜப்பானிய நிறுவனங்களான டொயோட்டா, ஹோண்டா போன்றவை அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை கொண்டு தொழிற்சாலைகளை இயக்கி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதே மாதிரியை சீன நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு.
அதே நேரத்தில், சீன நிறுவனங்கள் மெக்சிகோவில் கார்களை தயாரித்து, பின்னர் அவற்றை வரியின்றி அமெரிக்காவிற்குள் கொண்டு வரும் திட்டத்தை அவர் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இது அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாகவும், அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த கருத்து வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, BYD, MG போன்ற சீன மின்சார கார் நிறுவனங்களின் வளர்ச்சி அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு காரணங்கள் மற்றும் உள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்கும் நோக்கில், சீன கார்களுக்கு 100 சதவீதத்திற்கும் அதிகமான இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
இந்த சூழலில் அதிபரின் புதிய நிலைப்பாடு, அமெரிக்க முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய பொருளாதார அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b